Friday, March 16, 2012

தனிமை...

தனிமைகள் உடன் வர
நிழல்கள் மட்டும் துணையாகி
புரியாத மனிதர்களுக்குள்
நான் என்பதும் தொலைந்து
முகமூடி அணியா உறவுகளை
தேடி அலைந்தபடி
ஊரிலிருந்து உறவுகள்
குரல் கேட்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் ஊமையாய் அழுது
உதடுகள் நலமென மொழியும்
ஆன்மாக்கள் அழுதபடி
என்னைப் போல் இன்னும் எத்தனை பேரோ....

எனது வலிகளின் ஆணிவேர் யாருக்கும் தெரியப்போவதில்லை

எதிரே என்
முகம் மோதிப்போகும்
எவருக்குமே
எனக்குள் உறைந்து கிடக்கும்
வலிகளின் ஆணிவேர் தெரியப்போவதில்லை

நசுங்கிப்போன
எதிர்காலம் மீதான கனவுகளை
பசியடங்கிய பின்னும்
தின்று தீர்த்ததே வாழ்க்கை?

வினாடி தோறம்
சிலுவையில் அறையப்படும்
என் உயிரில்
எரிமலைப்பிழம்புகளின் மாநாடு

உங்கள் ஒரு சொட்டுக்கருணைக்காக
என் மனச்சிதைவுகளின்
காட்சிப்படிமங்களை
விளம்பரம் செய்வது
அர்த்தமற்ற ஆலிங்கனம்

எரிந்து
சிதைந்து
வெந்து
கருகி
துகள் துகளாய்
தூர்ந்து போனதே
எனது சுயம்

விழுங்கப்படும் உரிமைகளும்
சுதந்திரத்தின் மீதான
ஆதிக்க அழுத்தங்களும்
எனக்குள் வெறியேற்றும்
பிரயளத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
விதைத்தக் கொண்டிருக்கிறது

விரைவில் வெகுண்டெழப்போகும்
எனது ஆழ்கடல் ஏகாந்தம்
மனம் தின்னும் வலிகளைப்போலவே
யாராலும்
அடையாளம் காண முடியாதவை

நிறமற்ற கனவுகள்
மிக மிகப்பயங்கரங்களை
வலிகளின் புதைமணலில்
திணித்துக்கொண்டிருப்பது
முற்றுப்புள்ளியின் பக்கத்தில்தான்

விரைவில்
ஒட்டுமொத்த வலிகளைத்திரட்டி
உங்கள் மீது
எறிகணையாய் எறியப்போகிறேன்

பின்
மெல்ல மெல்ல நீங்களும்
உணரத்தொடங்குவீர்கள்
எனக்கே எனக்கான
வலிகளின் உள்ளார்ந்தங்களை

அப்போது
வலிகளற்ற வானவெளியில்
எனது சிறகுகளுக்கு
களைப்பேயிராது....!

Thursday, March 15, 2012

விடை கொடு காதலியே...

விடை கொடு காதலியே..!
கண்ணீர் விடாதே..!
இருள் போர்வைக்குள்
உன்னுடன்
இனிய சுகங்களைப்
பகிர்ந்து கொண்டதென்னவோ
உண்மைதான்..
நீ மேய்ந்த இடங்களெல்லாம்
நித்தமும் உன் நினைவைச்
சொல்லிக் கொண்டிருக்கும்!
ஆனாலும் அன்பே..!
பிரிந்து செல்கிறேன்..
நான் காதலை நேசிக்கிறேன்
கூடவே என் கனவுகளையும்!
ஒரு வேலைத் தேடித் தராத
உன் வெற்றுப் பட்டம்
என் எதிர்காலக் கனவுகளை
எரித்தே விடும்!
உன் உதடுகளில் எனக்கு
உணவு கிடைக்காது!
கரடு முரடான பாதையில்
கை கோர்த்து நடந்து
நாளைய வாழ்வை
நரகமாக்குவானேன்..?
ஓலைக் குடிசையில்
உள்ளங்களின் சங்கமத்தில்
காதல் கீதம் பாடி
களித்திருப்போமென்கிறாயா?
கற்பனையில் இவையெல்லாம்
கற்கண்டு விசயம்தான்!
சுடுகின்ற நிஜங்களில்
வாழ்க்கையின் தேவைகள்
சுட்டெரிக்கப்படும்போது
காதலென்பது வெறும்
கண்ணீராய்த்தான் முடியும்!
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது காதலியே!
நம்முடைய நெருக்கம்
நமக்கே சுமையாகுமுன்
நண்பர்களாகவே பிரிவோம்!
விடை கொடு காதலியே.....!!!

இருண்டு போன வாழ்க்கை...

என் இருண்டுபோன
வாழ்க்கையில்,
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச் சுட்டி
எதைப்பற்றி நான்
பேச போகிறேன்?

பாசம்,உறவுமனசு சில நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்....

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் தாகிக்கிறது
என் கணங்கள்....

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத் தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை..

இனியும் என்ன இருக்கிறது?

சேர்த்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும்
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நூறான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

வாழ்க்கையை தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போடு நிகழும்
திடீர் திருப்பம்???